நாகர்கோவில், பிப்.19: குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் கேரை, சுறா, கணவாய், இறால், புல்லன் ஆகிய உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் பகுதியில் கேரை மீன்கள் சீசன் ஆகும். ஆனால் கேரை மீன்கள் கிடைக்க வில்லை. குளச்சல் ஆழ்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளன. கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில படகுகளே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் 2 விசைப்படகுகள் நேன்று காலை கரை திரும்பியது. இவற்றுள் குறைந்த அளவு கேரை மீன்களே கிடைத்தன. அவற்றை மீனவர்கள் மீன் ஏலக்கூடத்தில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர். குறைந்த அளவு கேரை மீன்கள் கிடைத்ததால் டீசல் செலவுக்கு கூட பணம் கிடைக்க வில்லை என விசைப்படகினர் கவலை தெரிவித்துள்ளனர். குளச்சலில் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன் பிடித்தொழில் மந்தமடைந்துள்ளது.
