திருவாரூர்,பிப்.18: திருவாரூர் நகராட்சி பகுதியில் சுற்றிதிரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் மோகனசந்திரன் அறிவுரையின்படியும், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படியும், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் மற்றும் கமிஷ்னர் சுரேந்திர ஷா உத்தரவின் பேரில் நேற்று நகராட்சி ஊழியர்களை கொண்டு கால்நடை துறை மருத்துவர்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையொட்டி நகராட்சியின் நெய்விளக்குதோப்பு பகுதியில் இருந்து வரும் நாய்களுக்கான கருதடை மையத்தில் சுகாதார அலுவலர் பாஸ்கர் டேவிட்ராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தங்கராம், முருகானந்தம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இந்த அறுவை சிகிச்சை பணியானது நடைபெற்ற நிலையில் வாரம் ஒன்றுக்கு 20 நாய்களுக்கு இந்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
