ஒரத்தநாடு, பிப்.18: ஒரத்தநாடு அருகே பாலக்காட்டில் படுத்து உறங்கிய நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (58). இவர் நேற்று முன்தினம் இரவு சாலை ஓரத்தில் இருந்த பாலக்கட்டையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பாலக்கட்டையில் இருந்து அவர் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
அதிகாலையில், அவ்வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்த தமிழரசனை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
