சென்னை: டிஎன்பிஎஸ்சியின் புதிய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ப.ஸ்ரீவெங்கட பிரியா பொறுப்பேற்று கொண்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) கடந்த 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு தமிழ் தகுதித் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர். தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.
இதனையடுத்து அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்வு குளறுபடி காரணமாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், புதிய அதிகாரியாக ஸ்ரீவெங்கட பிரியா நியமிக்கப்பட உள்ளதாகவும் கடந்த 8ம் தேதி தகவல் வெளியானது. ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ப.ஸ்ரீவெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் முறைப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக பொறுப்பேற்றிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
