சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.317.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனை தற்போது 275 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி 100 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனைக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மொத்தம் 1,12,247 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளுடன், 65 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இரண்டாவது தளத்திற்கு மேல் 64 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று முதல் 6 தளங்கள் வரையிலான கூடுதல் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தரை மற்றும் ஆறு தளங்களுடன், 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். சென்னை, ராயபுரம், அரசு ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கூடுதல் நான்கு தளங்கள் (3 முதல் 6 தளங்கள்) மற்றும் புதிய இணைப்பு கட்டிடம் (தரை மற்றும் இரண்டு தளங்கள்), என மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் ரத்த வங்கி நவீன ரத்த கூறு பிரிப்பு அலகு ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளர் உமா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர். சுகந்தி ராஜகுமாரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
