சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.33.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 506 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 28 மாவட்டங்களில் உள்ள 69 முகாம்களில் 10,469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, ரூ.628 கோடி செலவில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகளும் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 18 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்ட 1904 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 2,055 வீடுகளில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் – பெத்திக்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் – பானாவரம், திருப்பத்தூர் மாவட்டம் – சின்னப்பளிக்குப்பம், சிவகங்கை மாவட்டம் – தாயமங்கலம், சென்னை மாவட்டம் – புழல் மற்றும் தென்காசி மாவட்டம் – ஆத்தியடிபிள்ளையார்கோயில் ஆகிய 6 முகாம்களில் ரூ.29 கோடியே 17 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 506 புதிய வீடுகளுக்கு ரூ.4 கோடியே 59 லட்சத்து 28 ஆயிரம் செலவில் அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
