18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சட்டப்பேரவை 3 நாள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2026-2027ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

கூட்டம் முடிந்தபிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (18ம் தேதி) சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதையடுத்து 2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் இன்றும், நாளையும் (19ம் தேதி) நடைபெறும். 20ம் தேதி (வெள்ளி) இடைக்கால நிதிநிலை அறிக்ைக மீதான பொது விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார். முன்னதாக 2026-2027ம் ஆண்டின் செலவிற்கான முன் பண மானிய கோரிக்கைகள் மற்றும் 2025-2026ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு வைக்கப்பட்டு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அன்றைய தினம் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். இன்றும், நாளையும் கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். வெள்ளிக்கிழமை கேள்வி-நேரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனநாயக முறையில் நடக்கிறது
வந்தே மாதரம் பாட்டு ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக பாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரை ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் வந்தே மாதரம் பாடப்படுமா? நம்முடைய மரபுப்படி சட்டசபையில் கவர்னர் உரையை படிக்க வரும்போது, வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கேள்வி-நேரம், முதல்வர் மற்றும் அமைச்சர் பதில் சொல்வது உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை கட் பண்ணுவதே கிடையாது. நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல பிரதமர் வர வேண்டாம் என்று சபாநாயகரே சொல்கிறார். அதேபோல இங்கு சொல்ல முடியுமா? நாடாளுமன்றம் ஜனநாயகம்தான். இங்கும் நாடாளுமன்றத்தைவிட சிறப்பான ஜனநாயகமாகத்தான் நடக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories: