பெயரளவிற்கு தண்ணீர் திறப்பு வறட்சியின் பிடியில் வடக்கு கண்மாய் திருப்பாச்சேத்தி விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்புவனம், பிப்.5: திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய்க்கு  பெயரளவிற்கு தண்ணீர் திறக்கப்பபட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வைகை ஆற்றில் இருந்து திருப்பாச்சேத்தி தெற்கு மற்றும் வடக்கு கண்மாய்க்கு வலது பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தெற்கு கண்மாய்க்கு நான்கு வழிச்சாலையை ஒட்டியே கால்வாய் செல்வதால் பிரச்சனையின்றி தண்ணீர் செல்கிறது. வடக்கு கண்மாய்க்கான கால்வாய் மட்டும் நான்கு வழிச்சாலையை கடந்து செல்கிறது. நான்கு வழிச்சாலை அமைக்கும்  போது கால்வாயில் பாலத்தை உயர்த்தி கட்டியதால் தண்ணீர் மேடேறி செல்லவில்லை. இரண்டு பகுதி கண்மாய்க்கும் பிரியும் இந்த இடத்தில் ஷட்டர் அமைத்து தண்ணீரை திருப்பி விட வேண்டும் என வடக்கு கண்மாய் பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் விவசாயிகளும் வற்புறுத்தவில்லை.

இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் வரத்து உள்ள நிலையில் 300 ஏக்கர் பரப்பளவுள்ள வடக்கு கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. மேலும்  கண்மாயை  நம்பியுள்ள 450 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் இக்கண்மாயை நம்பியுள்ள மோட்டார் பம்ப் செட் கிணறுகளிலும் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வடக்கு கண்மாய் பாசன விவசாயி மோகன் கூறுகையில், ‘‘பாலம் மேடாகவும் கால்வாய் பள்ளமாகவும் அமைந்திருப்பதால் வைகையில் நீர்வரத்து இருந்தும் தண்ணீர் செல்லவில்லை. கலெக்டரிடம் மனு கொடுத்தபின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெற்கு பகுதி கண்மாயை அடைத்துவிட்டு இரண்டு நாட்கள் மட்டும் தண்ணீரை திருப்பிவிட்டனர். கண்மாய் எல்லையை  தொடுவதற்குள் தண்ணீரை நிறுத்திவிட்டனர். தண்ணீரை நிறுத்தியதால் கண்மாய் இன்று வறண்டு காணப்படுகிறது. எனவே வடக்கு கண்மாய்க்கு குறைந்தது 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கண்மாயில் நீர் வரத்து இல்லாததால் தென்னந்தோப்புகளில் மரங்கள் எல்லாம் பட்டுப்போய்விட்டது. விவசாயம் பொய்த்து போனதால் பாசன நிலங்களில் எல்லாம் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.  எனவே பொதுப்பணித்துறையினர் வைகையில் இருந்து தண்ணீர் திறக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: