×

பிட்ஸ்

* இந்தியாவை கனவிலும் வெல்ல முடியாது: அக்தர்
கொழும்பு: உலகக் கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்தது. அது, பாக். ரசிகர்கள் மற்றும் வீரர்களை கலங்கடிக்க செய்தது. இந்நிலையில் பாக் முன்னாள் வீரர் ஷொயப் அக்தர் கூறுகையில், ‘சோகமான உண்மை என்னவெனில், இந்திய அணியை பாக். அணியால் கனவில் கூட வெல்ல முடியாது என்பதுதான். பாக். கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் (மோஷின் நக்வி), கடந்த சில ஆண்டுகளாக எடுத்த மோசமான முடிவும். திறமையற்ற நிர்வாகமும், பாக். அணியை சீரழித்துள்ளது’ என்றார்.

* எப்ஏ கால்பந்து: ஆர்சனல் வெற்றி
லண்டன்: இங்கிலாந்தில் முன்னணி அணிகள் பங்கேற்று ஆடிவரும் எப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த ஆர்சனல் – விகான் அத்லெடிக் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஆர்சனல் அணி வீரர்கள், பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த அணியின் நோனி மடுகே 11வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். 19வது நிமிடத்தில் கேப்ரியல் மார்டிநெலி 2வது கோல் போட்டார். 23வது நிமிடத்தில் விகான் அணியின் ஜாக் ஹன்ட் தவறுதலாக அடித்த ஓன் கோல், ஆர்சனல் அணி வசம் சேர்ந்தது. பின், 27வது நிமிடத்தில் கேப்ரில் மேலும் ஒரு கோல் அடித்தார். அதனால், 4-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அபார வெற்றி பெற்றது.

* பிரிஸ்டைல் செஸ் கார்ல்சன் சாம்பியன்
வெய்சனாஸ்: ஜெர்மனியின் வெய்சனாஸ் நகரில், முதலாவது ஃபிடே பிரிஸ்டைல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டியில் சாதுரியமாக ஆடிய கார்ல்சன் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். முடிவில் 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர், ஃபிடே பிரிஸ்டைல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

Tags : India ,Akhtar Colombo ,World Cup T20 ,Pakistan ,Pak ,
× RELATED பாகிஸ்தானை பந்தாடி சூப்பர் 8...