புதுடெல்லி: உலகக் கோப்பை டி20யில் நேற்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை, ஆப்கானிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. உலகக் கோப்பை டி20 தொடரின் 28வது போட்டி புதுடெல்லியில் நேற்று நடந்தது. அதில் ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய எமிரேட்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஆர்யன்ஷ் சர்மா ரன் எடுக்காமலும், கேப்டன் முகம்மது வாஸீம் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். அடுத்து இணை சேர்ந்த அலிஷான் ஷரபு, ஷொயப் கான் அட்டகாசமாக அடித்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், அலிஷான் 40 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின், ஒரு புறம் ஷொயப் கான் நிதானமாக ஆடிக் கொண்டிருக்க மறுபுறம், சையத் ஹைதர் 13, ஹர்சித் கவுசிக், முகம்மது அர்பான் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதுவரை தக்குப்பிடித்த ஷொயப் கான், 19வது ஓவரில் 68 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் எமிரேட்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. ஆப்கன் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4, முஜீபுர் ரஹ்மான் 2 விக்கெட் எடுத்தனர்.
பின், 161 ரன் இலக்குடன் ஆப்கன் களமிறங்கியது. அதன் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எடுக்காமல் அவுட்டானபோதும் மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரன் அட்டகாசமாக ஆடி 41 பந்துகளில் 53 ரன் குவித்து அவுட்டானார். பின் வந்தோரில் டார்விஷ் ரசூலி, 23 பந்துகளில் 33, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டமிழக்காமல் 21 பந்தில் 40 குவித்தனர். 19.2 ஓவரில் ஆப்கன் 5 விக்கெட் மட்டுமே இழந்து 162 ரன் எடுத்தது. அதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை ஆப்கன் பதிவு செய்தது. 40 ரன்கள் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்மதுல்லா ஆட்ட நாயகன்.
