லக்னோ: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியின் 2வது நாளில் நேற்று, கர்நாடகா அணி, 6 விக்கெட் இழப்புக்கு 689 ரன் குவித்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகின்றன. லக்னோவில் நடந்து வரும் போட்டியில் கர்நாடகா – உத்தரகாண்ட் அணிகள் மோதி வருகின்றன. முதல் நாளான நேற்று முன்தினம் டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதல் இன்னிங்சை துவக்கிய கர்நாடகா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்திருந்தது. கே.எல்.ராகுல் 141 ரன்கள் விளாசியிருந்தார்.
தேவ்தத் படிக்கல் 148, கருண் நாயர் 38 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் படிக்கல், 232 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கருண் நாயர் 60 ரன்னில் வீழ்ந்தார். அதன்பின் ஸ்மரன் ரவிச்சந்திரன், கிருதிக் கிருஷ்ணா இணை சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த இணை 123 ரன்கள் சேர்த்த நிலையில், 6வது விக்கெட்டாக, கிருதிக் கிருஷ்ணா 60 ரன்னில் அவுட்டானார். 2ம் நாள் முடிவில், கர்நாடகா, 180 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 689 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ரவிச்சந்திரன் 121, வித்யாதர் பாட்டீல் 35 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
