கொல்கத்தா: உலகக் கோப்பை டி20 போட்டியில் இத்தாலியை வென்று, சூப்பர் 8 சுற்றுக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளது. ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் 29வது போட்டி, கொல்கத்தாவில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர் ஜாஸ் பட்லர் 3 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் 15 பந்துகளில் 28 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஜேகப் பெத்தெல் 23, டாம் பேன்டன் 30, கேப்டன் ஹேரி புரூக் 14, சாம் கர்ரன் 25 ரன் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ஆடிய வில் ஜாக்ஸ் ஆட்டமிழக்காமல், அதிரடியாக 22 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 53 ரன் விளாசினார். அதனால், 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இத்தாலி களமிறங்கியது. துவக்க வீரர்களில் ஒருவரான ஆன்டனி மோஸ்கா, அடுத்து வந்த ஜேஜே ஸ்மட்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான துவக்கத்தை தந்தனர். கேப்டன் ஹேரி மனேன்டி 12 ரன்னில் வீழ்ந்தார்.
இருப்பினும், மற்றொரு துவக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா, பென் மனேன்டி இணை சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்த நிலையில், பென் 60 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜஸ்டின் மோஸ்கா 34 ரன்னில் ஆட்டமிழந்து அணியை தவிக்க விட்டார். சாம் கர்ரன் வீசிய 16வது ஓவரில் மார்கஸ் கேம்போபியானோ 2 ரன்னிலும், கியான் பியரோ மீட் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். பின்னர், 19வது ஓவரில் கிரான்ட் ஸ்டீவர்ட் 45, 20வது ஓவரில் ஜஸ்பிரித் சிங் 12, அலி ஹசன் ரன் எடுக்காமல் வீழ்ந்தனர். 20 ஓவரில் இத்தாலி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இங்கிலாந்து 24 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, சி பிரிவில் 3 வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு, 2வது அணியாக இங்கிலாந்து முன்னேறியது.
