மும்பை: நேபாளம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. உலகக் கோப்பை டி20 தொடரின் 25வது போட்டி, சி-பிரிவில், மும்பையில் நேற்று நடந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் – நேபாளம் அணிகள் மோதின. முதலில் ஆடிய நேபாளம் அணியின் துவக்க வீரர்கள் குஷால் புர்டெல் 1, ஆஸிப் சேக் 11, பின்வந்த கேப்டன் ரோகித் பவுதெல் 5 ரன் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்களில் தீபேந்திர சிங் அய்ரீ மட்டும் சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 58 ரன் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், நேபாளம், 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை பறித்தார். அதையடுத்து, 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் பிராண்டன் கிங் 22 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் இணை சேர்ந்த மற்றொரு துவக்க வீரரும் கேப்டனுமான ஷாய் ஹோப் (44 பந்து, 61 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (32 பந்து 46 ரன்) அட்டகாசமாக ஆடி, நேபாளம் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அவர்களை பிரிக்க முடியாமல் நேபாளம் வீரர்கள் திணறினர். 15.2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 134 ரன்கள் விளாசி 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து, சூப்பர் 8 சுற்றுக்கு, முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது. ஆட்ட நாயகனாக வெஸ்ட் இண்டீசின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார்.
