- உலகக் கோப்பை 2026
- சோயிப் அக்தர்
- இந்தியா
- கராச்சி
- 10 வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
- இலங்கை
- பாக்கிஸ்தான்
- கொழும்பு பிரேமதாச ஸ்டேடியம்
கராச்சி: 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பரம எதிரி பாகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரின் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி கதிகலங்கி விட்டது. பின்னர், திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும், ஓரளவுக்கு ரன்கள் எடுத்தனர். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா, முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி அடிக்க முயன்று கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் (சிக்ஸர் துபே) என்று அழைக்கப்படும் சிவம் துபே சில பவுண்ரிகளை அடிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18 ஓவர் முடிவில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. இதைத்தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 முறை மோதியதில், 8 போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான படுதோல்விக்குப் பிறகு கொந்தளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். “இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது உள்ளது. பாக்., கிரிக்கெட் வாரியத்தை எப்படி நடத்துவது என்று மோசின் நக்விக்குத் தெரியவில்லை. உலகில் மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதியற்ற நபரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான்” என்று கூறியுள்ளார்.
