900 கோடியை நெருங்கும் விடியல் பயணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: விடியல் பயணம் 900 கோடி நெருங்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்த நாளை ஒட்டி 7300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கே.கே.நகர் பிரதான சாலையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தையல் மிஷின், மிக்ஸி, கிரைண்டர், காஸ் ஸ்டவ் மற்றும் புடவைகள் என 7300 பேருக்கு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கின்ற வியக்கத்தகும் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும். இன்று விடியல் பயணம் 900 கோடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகளிருக்கான இந்த பயணத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள், திருநம்பிகள் கூட இன்றைக்கு விலை இல்லாமல் பயணம் செய்கின்றனர். இந்த மகிழ்ச்சியான, சூழல் இன்றைக்கு தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. முதல்வரின் சாதனைகளைச் சொன்னால் ஒரு நாள் ஆகிவிடும் என்பதால் சிலவற்றை மட்டும் கூறுகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க மகளிருக்கு, மார்பகப் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கு இந்தியா முழுக்க எந்த அரசும் ஒன்றும் செய்யவில்லை. இன்று நமது முதல்வர் 14 வயதில் உள்ள 3,38,649 பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் முதலமைச்சர் இத்திட்டத்தை எடுத்து வைத்துள்ளார், அற்புதமான திட்டம் இதுபோன்ற நிறைய செய்திகளை சொல்லலாம். நமது முதல்வர் மீண்டும் 2026ல் உங்களின் பேராதரோடு முதலமைச்சராக வர இருக்கிறார். அதற்கு உங்கள் ஆரவாரமே சாட்சி. இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு குழு தலைவருமான க.தனசேகரன் பேசுகையில், ‘நடிகர் விஜய் பிறந்து வளர்ந்தது நம்ம சாலிகிராமத்தில் சூட்டிங் பண்ணது சம்பாதித்தது நம்ம தொகுதியில் தான். இங்கு ஏறத்தாழ 7 ஆயிரம் மகளிர் அமர்ந்துள்ளீர்கள். உங்களில் யாராவது ஒருத்தர் விஜய்யால் பயன் பெற்றேன் என்று சொல்ல முடியுமா?’ என்றார். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்எல்ஏ, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: