×

சென்னையில் விஜய் கார் முன் மறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்; தவெகவில் சீட் வாங்க அடாவடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அஜிதா ஆக்னல்

 

* பனையூருக்கு அனுப்பியது போலி கடிதம்
* பரதர் நலச்சங்கத்தினர் பரபரப்பு புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளராக அஜிதா ஆக்னலை அறிவிக்க கோரி விஜய்க்கு அனுப்பப்பட்ட கடிதம் போலியானது என்று பரதர் நலச்சங்கத்தினர் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். இவர், தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார். பின்னர், கட்சியில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று கட்சி தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விஜய் கண்டுகொள்ளாததால் கடந்த டிச. 25ம் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சில நாட்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு சமூகநல நலப்பணிகளை அஜிதா ஆக்னல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அஜிதா ஆக்னல் விருப்ப மனு அளித்துள்ளார். இதற்கிடையே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான 2026 தேர்தலில் அஜிதா ஆக்னலை கட்சியின் வேட்பாளராக பரிசீலிக்க வேண்டும் என முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் சார்பில் ஒரு கடிதம் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதில், கூறப்பட்டிருப்பதாவது: கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து தூத்துக்குடி தொகுதியில் நகர்ப்புறம், கிராமப்புறம், மீனவர் குடியிருப்புகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கை, சமூகநல பணிகள், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் அஜிதா ஆக்னல் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் சாதி-மத வேறுபாடின்றி பொதுமக்கள் ஆதரவை பெற்றுள்ளார். அவர், மீனவர் சமூகத்தவராக இருந்தாலும், அனைத்து சமூக மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட தலைவராக உருவெடுத்துள்ளார். மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு முயற்சிகளில் ஈடுபடும் அவரது அணுகுமுறை, வருங்கால எம்எல்ஏவுக்கான தகுதியை வெளிப்படுத்துகிறது. ஆகவே, தூத்துக்குடி தொகுதியில் வெற்றியை பெற்று தரக்கூடிய வேட்பாளராக இருப்பார். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த கடிதத்திற்கும் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் ராஜி, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “சங்கத்தின் லெட்டர் பேடு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எந்த கடிதமும் அனுப்பவில்லை. இது முறைகேடு மற்றும் சட்ட விரோத செயல். சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாகவும் ஏமாற்றும் நோக்கத்துடனும் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வருகிற 21ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள பரதர் குல மாநாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், போலி கடிதத்தை தயாரித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜிதா ஆக்னலே தனது செல்வாக்கை பயன்படுத்தி முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க ‘லெட்டர் பேடில்’’ ஆதரவாளர்களை வைத்து விஜய்க்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்ற சந்தேகம் தவெகவினர் மற்றும் மீனவர் சமுதாயத்தினர் மத்தியில் எழுந்துள்ளது. அஜிதா ஆக்னல் என்றாலே பரபரப்பும், சர்ச்சையும் தானா? என தவெகவினர் அங்கலாய்க்கின்றனர்.

Tags : Ajita Agnal ,Vijay ,Chennai ,Taweka ,Banayur ,Tuthukudi ,Bharathar ,Tukudi Assembly Constituency ,
× RELATED கெஞ்சும் எடப்பாடி: ஊர்ந்து சென்று பதவி வாங்கினாருனு சொல்லாதீங்கப்பா…