புதுடெல்லி,: நாட்டில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை பேராசிரியர்களாக நியமிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது . மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்தா மஜூம்தார்,யுஜிசி விதியின்படி, இந்தியாவில் 56 ஒன்றிய பல்கலைக்கழகங்கள், 460 மாநில பல்கலைக்கழகங்கள், 128 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. நாட்டில் சுமார் 45,473 கல்லூரிகள் உள்ளன.
உயர் கல்வி நிலையங்களில் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை பேராசிரியர்களாக நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி ) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தொழில் அல்லது பணியில் நிபுணத்துவம் பெற்ற, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி உடையவர்கள்.ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பயிற்சி பேராசிரியரின் அதிகபட்ச சேவைக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் ஆனபிறகும், 80% ஒன்றிய பல்கலைக்கழகங்கள் இன்னும் இந்த திட்டத்தின்படி பேராசிரியர்களை நியமிக்கவில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.இதுவரை 349 உயர்கல்வி நிறுவனங்களில் 1,841 பேர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தான் அதிகளவு தொழில்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தார் போல் மகாராஷ்டிரா,குஜராத் மாநிலங்களில் இதுபோன்ற நியமனங்கள் நடந்துள்ளது என்றார்.
