முனிச்: சர்வதேச அளவில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடந்த மாநாட்டில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்யா மோதலுக்குப் பிறகு சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 20.9 லட்சம் பேரலாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 11.6 லட்சம் பேரலாகக் குறைந்த போதிலும், நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நேற்று நடைபெற்ற 62வது ஆண்டு பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவை பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்தியா தனது தன்னாட்சி கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ளது. தன்னாட்சி என்பது இந்தியாவின் வரலாற்றோடும் பரிணாம வளர்ச்சியோடும் பிணைக்கப்பட்டது. இதுவொரு பொதுவான ஆழமான கொள்கை. பொதுவாக எரிசக்தி சந்தையானது மிகவும் சிக்கலானது. ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களைப் போலவே இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் கிடைக்கும் தன்மை, விலை மற்றும் அபாயங்களைக் கணக்கில் கொண்டே கொள்முதல் முடிவுகளை எடுக்கிறது.
நாங்கள் எடுக்கும் சில முடிவுகள் மற்றவர்களின் சிந்தனைக்கு ஏற்ப இருக்காது, ஆனால் தேசிய நலன் கருதி நாங்கள் எடுக்கும் சுதந்திரமான முடிவுகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என அவர் அதிரடியாகத் தெரிவித்தார். மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் அமைச்சர்களைச் சந்தித்து உலகளாவிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் 80 திட்டத்திற்கும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக கடந்த 2025ம் ஆண்டில் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்திருந்தது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக 25 சதவீதம் கூடுதல் தண்டனை வரியும், பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டிருந்தது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவி வந்தது. ெதாடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையால் சமீபத்தில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி இந்தியப் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம் கடந்த 7ம் தேதி முதல் முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.
இதில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பரஸ்பர வரியானது 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யவும், அமெரிக்காவின் எரிசக்தித் தேவைகளைப் பயன்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில் முனிச்சில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்முதல் தொடரும் என்றும் இந்தியாவின் தன்னாட்சி கொள்கையில் மாற்றமில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
