கொழும்பு: ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் 27வது போட்டி, கொழும்பு நகரில் ஏ பிரிவில் நேற்று நடந்தது. அப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா, பாக்.கின் சயீம் அயூப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பந்தில் ரன் எடுக்காமல் கிளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார். அதன் பின் மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷண் அட்டகாசமாக ஆடி 77 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
அதையடுத்து, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை சேர்ந்து நிதானமாக ஆடிய நிலையில், திலக் (25 ரன்), சயீம் அயூப் வீசிய 15வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யாவும், அதே ஓவரில் பாபர் அஸமிடம் கேட்ச் தந்து ரன் இன்றி வெளியேறி அணியை தடுமாறச் செய்தார். அதன் பின் இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறையத் துவங்கியது. ஓவருக்கு 10க்கு மேல் இருந்த ரன் ரேட் விகிதம், 16 ஓவர் முடிவில் 8.50 ஆக இருந்தது. பின்னர், சூர்யகுமார், சிவம் தூபே இணை சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த நிலையில், உஸ்மான் தாரிக் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் சூர்யகுமார் (32 ரன்) வீழ்ந்தார்.
கடைசி ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் சிவம் தூபே (17 பந்து, 27 ரன்) ரன் அவுட்டானார். அடுத்த பந்தில் அக்சர் படேல் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. ரிங்கு சிங் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாக். தரப்பில் சயீம் அயூப் 3, சல்மான் ஆகா, ஷாஹீன் ஷா, உஸ்மான் தாரிக் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 10 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 2வது அணியாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
பேக் டு பேக் ஃபிப்டி இஷான் சரவெடி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் இஷான் கிஷண் புயலாய் சுழன்றடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். முதல் பந்திலேயே மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தபோதும், சிறிதும் அலட்டிக்கொள்ளாத இஷான், 27 பந்துகளில் அரை சதம் வெளுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 40 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 77 ரன் குவித்தார். இதற்கு முன் கடந்த 12ம் தேதி, நமீபியாவுடன் நடந்த போட்டியிலும் இஷான் அமர்க்களமாக ஆடி 24 பந்துகளில் 61 ரன்களை வேட்டையாடினார். பாக்.கிற்கு எதிராக மீண்டும் பேக் டு பேக் அரை சதம் அடித்த இஷான், இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
