கலால் துறை நிர்வாக உத்தரவில் கர்நாடக முதல்வரின் கையெழுத்து உண்மையா?: தடயவியல் சோதனை நடத்த பாஜக கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ கடிதத் தாள் மற்றும் கையெழுத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத் தாளில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் மாண்டியா மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் மைசூரு கலால் துறை துணை ஆணையராக நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா போலீசுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விதான் சௌதா போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கார்க்கலா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வி.சுனில் குமார் நேற்று புதிய புகார் ஒன்றை எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்திலேயே கடிதத் தாள் மோசடி கும்பல் ஒன்று செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சரின் கையெழுத்து குறித்து தடய அறிவியல் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து முதலமைச்சருடையதா அல்லது போலியாக உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அது முதலமைச்சரின் கையெழுத்துதான் என்றால், அவர் தேதி குறிப்பிடாத வெற்றுத்தாளில் கையெழுத்துப் போட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதன் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார் என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Related Stories: