சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்று வெற்றி நிச்சயம் 2.5 கோடி வாக்குகள் 200 தொகுதிகள் இலக்கு: திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

வேலூர்: இரண்டரை கோடி வாக்குகள், 200 தொகுதி இலக்கு, திமுக வரலாற்று வெற்றி நிச்சயம் என்று திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-லிருந்து நாம எதிர்கொண்ட எல்லாத் தேர்தல்களிலும் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான். அது சாதாரண வெற்றி அல்ல, சதிகளை முறியடிச்ச சரித்திர வெற்றி. ஒவ்வொன்றும் எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி. இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும் தமிழ்நாட்டோட நிரந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான், கருப்பு சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம தான். 7வது முறையாகவும் திமுக ஆட்சி தான்.

திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்துல சொல்லவில்லை. ரொம்ப அடக்கத்தோட, மிகுந்த பணிவோட நம்ம அரசு செஞ்சிருக்கக்கூடிய சாதனைகள் மேல நான் வச்சிருக்கக்கூடிய நம்பிக்கையில சொல்றேன். எல்லாத்துக்கும் மேல உடன்பிறப்புகளான உங்க மேல இருக்கக்கூடிய நம்பிக்கையில தான் சொல்றேன். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டிலிருக்கக்கூடிய ஒவ்வொரு தொகுதியும் திமுக கோட்டைன்னு நாம இந்த முறை நிரூபிச்சு காட்டணும். 2026-ல திமுகவின் வெற்றி என்பது இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வரலாற்று வெற்றியா இருக்கணும்.

தமிழ்நாடு முழுக்க 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம் ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நாம் நியமிச்சிருக்கிறோம். தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை பூத் இருக்கு? 75,000 பூத் இருக்கு. இப்படி ஒவ்வொரு பூத்திலயும் நாம் செட் பண்ணி இருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்ட நாம அச்சீவ் பண்ணாலே 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல நாம வாங்கிடுவோம். இந்தத் தேர்தல்ல 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாம நாம வாங்கியே ஆகணும்.

இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு அசைன் பண்ணி இருக்கக்கூடிய 50 வாக்குகளைப் பெற்றுத் தந்தாலே போதும், நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணிடுவோம். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல ஜெயிக்கிறதுதான் நம்முடைய லட்சியம். அதுக்கு முதல்ல ரெண்டு மாசம் ஓய்வை மறந்து உழைக்கணும். தேர்தலுக்குள்ள நீங்க ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களைக் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்கணும். இதை ஏன் சொல்றேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், நேர்ல சந்திச்சு மக்கள் கிட்ட பணிவா வாக்கு கேக்குற பிரச்சாரத்திற்கு எதுவும் ஈடாகாது.

அதனாலதான் நான் திரும்பத் திரும்பச் சொல்றேன், பரம்பரை பரம்பரையா திமுகவுக்கு வாக்களிக்கிற குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்திச்சு சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி வாக்கு கேட்டுக்கொண்டே இருக்கணும். இதை நீங்க ரிப்பீட் மோடுல பண்ணனும், அப்பதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும். 2021-ல இருந்ததை விட தமிழ்நாடு முழுக்க நமக்கான வரவேற்பும் ஆதரவும் இப்ப கூடியிருக்கு. 2021 தேர்தல்ல இதையெல்லாம் செய்வோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.

இப்போ சொன்னதையும் தாண்டி செஞ்சுக்கிட்டு இருக்கோம். அதனால கெத்தா மக்கள் முன்னாடி வந்து நிக்கிறோம். அதனால மந்தமாக இருக்காம களத்துல தொடர்ந்து உழைச்சா சென்ற முறை அடைந்ததை விட பெரிய வெற்றி 100 சதவீதம் சாத்தியம், 100 சதவீதம் சாத்தியம். வீடு வீடா போங்க, சகஜமா உரிமையோடு பிரச்சாரம் செய்யுங்க. அவங்ககிட்ட நம்ம சாதனைகளை பொறுமையாக விளக்கிச் சொல்லுங்க. அவங்களே அதை உணர்ந்து நமக்கு வரவேற்பு அளிப்பாங்க. இதுக்காக உங்களுக்குத் தேவைப்படக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை உங்க எல்லாருக்கும் நாங்க வழங்கியிருக்கோம்.

அதுல நம்மோட 5 ஆண்டு சாதனைகளை விளக்கிச் சட்டமன்றத்தில் நான் பேசின பேச்சு தெளிவா இருக்கு. அதை முழுசா படிச்சு அதுல உள்ள திட்டங்களை ஒண்ணு விடாம மனப்பாடமே பண்ணிடுங்க. நம்முடைய ஆட்சிக் காலத்துல ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில பயன்பெறக்கூடிய வகையில நம்ம திட்டங்கள் அமைஞ்சிருக்கு. அடுத்த 2 மாதம் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும் அவங்க கண்ணுக்கு திமுக பிராண்ட் தான் தெரியணும், மறந்துடாதீங்க. தெருமுனை கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளணும். இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியை நோக்கி அதிக அளவில் ஈர்க்கணும்.

எனவே திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க, அந்த ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நம்மோடு நம்பிக்கை இலக்கை, நீங்கள் எல்லோரும் உங்கள் நெஞ்சங்களில் ஏந்தி அந்த இலக்கை அடைய ஒற்றுமையா பணியாற்றணும். நம்ம இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள். 200 தொகுதிகளை வெற்றி பெறணும்னா என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு. வேட்பாளரை அறிவிக்கிற பொறுப்பை தலைமைக்கழகம் பார்த்துக்குவோம். வெற்றி பெறக்கூடியவர் தான் வேட்பாளர், திறமையுள்ளவர் தான் வேட்பாளர். அவரை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டியது உங்கள் கடமை.

ஏழாவது முறையும் கழக ஆட்சி அமைந்தது என்ற வரலாற்றை எழுத வீரியத்தோடு செயல்படுங்க. மீண்டும் சொல்லுகிறேன், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம்முடைய தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கணும். அதற்கான அத்தனை களப்பணியையும் நீங்க இடைவிடாம செய்யணும். இவ்வாறு அவர் பேசினார்.

* இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும் தமிழ்நாட்டோட நிரந்தர டிரெண்ட் பிளாக் அண்ட் ரெட் தான், கருப்பு சிவப்பு தான்.
* நம்முடைய ஆட்சிக் காலத்துல ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில பயன்பெறக்கூடிய வகையில நம்ம திட்டங்கள் அமைஞ்சிருக்கு.
* அடுத்த 2 மாதம் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும் அவங்க கண்ணுக்கு திமுக பிராண்ட் தான் தெரியணும்.

Related Stories: