தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (14.02.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தொடர்பாக இலங்கையின் யாழ்ப்பாணம் நீதிமன்றம் 03.02.2026 அன்று வழங்கிய தீர்ப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் 05.02.2026 அன்று மிரிஹானா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம் நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: