சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஏ.எஸ்.கேரியர் என்ற நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு 17.64 ஏக்கர் நிலம் கடந்த 2005ல் வழங்கப்பட்டது. இந்த நிலத்திற்கு அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1 என குத்தகை தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த நிலத்தில் உள்ள 93,718 சதுர அடி இடத்தை அந்த நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாதம் ரூ.12 லட்சத்து 41,764க்கு மறு குத்தகைக்கு வழங்கியது.
இதை எதிர்த்து சிப்காட் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், மறு குத்தகை தொகையை வழங்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து கடந்த 2022ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிப்காட் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியண், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிப்காட் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொழில் நடத்துவதற்காக குறைந்த வாடகையில் வழங்கப்பட்ட அரசு நிலத்தை வணிக ரீதியாக சுரண்டுவதை ஏற்க முடியாது. இ
துபோன்ற ஒப்பந்தங்கள் பொது கொள்கைக்கு எதிரானது. மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக மேல் நிபந்தனைகளை விதிக்க சிப்காட்டுக்கு உரிமை உள்ளது. மறு குத்தகை கட்டணத்தை வசூலிக்க சிப்காட்டுக்கு அதிகாரம் உள்ளதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
பொது வளத்தை தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே, கடந்த 2022ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவனம் பெற்ற மறு குத்தகைக்கான கட்டணங்களை திரும்பபெற சிப்காட்டுக்கு உரிமை உள்ளது, என்று உத்தரவிட்டனர்.
