டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த நாடு முழுவதும் உள்ள மொத்தம் 297 இடங்களில் இக்கட்சி 209 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களைப் பிடித்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக இந்திய பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானை போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வலியுறுத்தினார். வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாரிக் ரஹ்மான், வரும் பிப். 17ம் தேதி (நாளை மறுாள்) பதவியேற்க உள்ளார். தாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பகுதியில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளின் தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய பிரதமர் மோடி அன்றைய தினம் மும்பையில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால், இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
