மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்: எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை; நிர்வாண நிலையில் வகுப்பு தோழன் அறையில் மீட்பு

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த 24 வயது மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது வகுப்பு தோழரான பியூஷ் தனோட்டியா என்பவருடன் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த மாணவி மாயமான அன்றைய தினமே அவரது செல்போனில் இருந்து கல்லூரி வாட்ஸ்அப் குழுவிற்கு ஆபாச வீடியோ ஒன்று பகிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோவில் மாணவியின் முகம் தெரிந்த நிலையில், அவருடன் இருந்த நபரின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்ததை தொடர்ந்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாணவியின் தோழன் பியூஷின் வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் பியூஷ் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மாணவி நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், மாணவியின் தந்தை தனது மகளை அவர் அணிந்திருந்த சாக்ஸை வைத்து அடையாளம் காட்டினார். மாணவியின் கழுத்தில் கயிறு தழும்பு இருந்ததால் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுமார் மூன்று நாட்களுக்கு முன்பே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ‘எனது மகளை பியூஷ் மனரீதியாக துன்புறுத்தி, மிரட்டி கொலை செய்துள்ளான்’ என தந்தை குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள பியூஷை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: