நடிகர் பிரகாஷ் ராஜ் தாய் மரணம்: பெங்களூருவில் இறுதிச்சடங்கு

பெங்களூரு: நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் மரணமடைந்ததால், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலேயே சுவர்ணலதாவின் உயிர் பிரிந்தது. தொடர்ந்து, நேற்றே அவரது உடல் பெங்களூருவில் தகனம் செய்யப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

தனது தாயாரின் மறைவு குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ‘எனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது தாயின் தியாகமே முக்கிய காரணம். அவர் ஒரு நர்சாக பணியாற்றி என்னை வளர்த்தெடுத்தார். கடந்த 2018ம் ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது ஏற்பட்ட ஞாபக மறதி என்னை தனிப்பட்ட முறையிலும், தொழில்துறையிலும் பெரிதும் பாதித்தது’ என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக பிரகாஷ் ராஜுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் சுவர்ணலதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் கன்னட, தெலுங்கு, தமிழ் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: