எட்டயபுரம்: எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அரசு நிர்ணயம் செய்துள்ள நுழைவு கட்டணத்தை விட கூடுதலாக குத்தகைதாரர்கள் வசூல் செய்வதால் விவசாயிகளும், வியாபாரிகளும் விரக்தி அடைந்துள்ளனர். எனவே முறையான கட்டணம் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், குறிப்பாக மானாவாரி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் உபரி தொழிலாக ஆடு வளர்ப்பு தொழில் நடைபெறுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்து அதனை பணமாக மாற்றுவதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது.
மாவட்டந்தோறும் ஆட்டுச்சந்தை இருந்தாலும் தென் தமிழகத்தில் முக்கிய சந்தையாக எட்டயபுரம் ஆட்டுச்சந்தை விளங்குகிறது. வாரந்தோறும் நடைபெறும் இந்த சந்தையில் கோடிகளில் வியாபாரம் நடைபெறுகிறது. எட்டயபுரம் ஜமீன்தாரால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, எள், உளுந்து உள்ளிட்ட விவசாய பொருட்களோடு தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்வதற்காக வாரந்தோறும் சனிக்கிழமை கட்டணம் ஏதுமின்றி இச்சந்தை உருவாக்கப்பட்து. காலப்போக்கில் நிர்வாக காரணங்களுக்காக 5 பைசாவில் தொடங்கி 25 பைசா வரை வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. ஆரம்பத்தில் பேரூராட்சி நிர்வாகம் 20 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்தது. ஆனால் குத்தகைதாரர்கள் 60 ரூபாய் என அடாவடியாக கட்டாய வசூல் செய்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியான நிலையில், நிர்ணய கட்டணத்தை ரூ.20ல் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட குத்தகைதாரர்கள், பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக 40 ரூபாய் சேர்த்து நூறு ரூபாய் வசூலிக்கின்றனர்.
இதுபற்றி விவசாயிகள், வியாபாரிகள் கேட்டால் நாங்கள் ஏலம் அதிக தொகைக்கு எடுத்து விட்டோம். எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என காரணம் கூறுகின்றனர். கூடுதல் கட்டணம் தர மறுக்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதுசம்பந்தமாக எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் ரூ.60ஐ வசூலிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 மாதத்தில் ரூ.50 லட்சத்துக்கு மேல் கூடுதல் கட்டாய வசூல்
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வருடத்திற்கு 52 முறை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி துவங்கி தற்போது வரை 44 முறை சந்தை கூடியுள்ளது. குறைந்த அளவு ஒரு சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஆட்டிற்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் கூடுதலாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் 44 சந்தை கூடுகையில் சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் விவசாயிகளிடம் இருந்து கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கும் கட்டாய கட்டணம்
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் நுழைவு கட்டணம் மட்டுமே வசூலிக்கும் உரிமை குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடுகளை ஏற்ற இறக்க வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை. ஆனால் ஆடுகளை ஏற்ற இறக்க வரும் வாகனங்களிடம் இவர்களாகவே ரசீது அச்சடித்து ரூ.30ல் இருந்து 50 வரை வசூலிக்கின்றனர். வாரந்தோறும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் நிலையில் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல் செய்கின்றனர். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், எட்டயபுரம் வீதிகளில் எங்கு வாகனம் நின்றாலும் தேடிச் சென்று கட்டாய வசூல் செய்கின்றனர்.
