குமரி மாவட்டத்தில் நெற்பயிரில் மகசூல் குறைவு, விலை வீழ்ச்சி: ஒரு கோட்டை ரூ.1750க்கு விற்பனை

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெற்பயிர் அறுவடையில் மகசூல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது கும்பப்பூ நெற்பயிர் அறுவடை பணி தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேரூர், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணி நடந்தது. தற்போது சுசீந்திரம் பெரிய குளம், பறக்கை குளங்களை நம்பி பயிரிடப்பட்டு உள்ள வயல்களில் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்கள் அறுவடை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கன்னிப்பூ, கும்பப்பூ பயிர்களில் கும்பப்பூ பயிர்களில் அதிக பூச்சி தாக்குதல் இருக்கும். இதற்கு குளிர்ச்சியான சீதோஷண நிலை நீடிப்பதுவே காரணமாகும்.

கும்பப்பூ பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் பொன்மணி, திருப்பதிசாரம் 3 ரக நெல் மகசூல் அதிமாக இருக்கும். ஆனால் தற்போது அறுவடை செய்யப்படும் பறக்கை, சுசீந்திரம் பகுதியில் மகசூல் குறைவாக கிடைத்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். ஒரு கோட்டை பொன்மணி நெல் ரூ.1750க்கும், திருப்பதிசாரம் 3 ரக நெல் ரூ.1800க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு திறந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் ரூ.2500க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் குத்தகைக்கு நிலம் எடுத்தே விவசாய பணிகள் நடந்து வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டு கொடுக்கும் போது, நிலத்திற்கான கரம், அடங்கல் கொண்டு செல்ல வேண்டும். தற்போது குத்தகைதாரர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கல் கொடுக்க வில்லை. இதனால் அவர்கள் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொடுக்க முடியாமல், வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு கொடுத்து செல்கின்றனர். கிராம நிர்வாக அதிகாரிகள் குத்தகைதாரர்களுக்கு அடங்கல் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்
இது குறித்து பறக்கை விவசாயி ரவீந்திரன் கூறியதாவது: கும்பப்பூ சாகுபடி செய்யும் போது ஒரு ஏக்கர் நிலத்திற்கு அறுவடை காலம் வரை சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 32 கோட்டை நெல்வரை கிடைத்தால் மட்டுமே அவர்கள் செலவு செய்த தொகையை தவிர சிறிது லாபத்தை பார்க்க முடியும். ஆனால் தற்போது சுசீந்திரம், பறக்கையில் அறுவடை தொடங்கியுள்ளது. நெற்பயிரில் மகசூல் குறைவாக கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் காலநிலைக்கு மாறாக ஒரு சூறை காற்று வீசியது.

இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது அறுவடை செய்யப்படும் ஒரு ஏக்கர் வயலில் அதிகபட்சமாக 16 கோட்டை நெல் கிடைக்கிறது. ஒரு கோட்டை ரூ.1750க்கு விற்பனை செய்யும் போது ரூ.28 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதில் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்லும் வண்டிக்கு வாடகையும் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் செலவு செய்த பணம் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆனால் வைக்கோல் ஒரு கட்டு ரூ.200க்கு விலை போகிறது. வைக்கோலில் கிடைக்கும் பணத்தை வைத்து அறுவடை செய்ய பயன்படுத்திய வாகனத்திற்கு பணத்தை கொடுத்து விட்டு நஷ்டத்தோடு வீட்டிற்கு விவசாயிகள் செல்கின்றனர்.

செலவு செய்த பணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் அனைத்து விவசாயிகளும் நெல்லை கொண்டு கொடுப்பதற்கு குத்தகைதாரர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கல் வழங்க உத்தரவிட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.

Related Stories: