சென்னை: வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் செலுத்தியதற்காக வீடுகளின் முன்பாக கோலமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளான ரூ.1 கோடியே 31 லட்சம் பெண்கள் வங்கி கணக்கில் நேற்று காலையில் திடீரென ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டது. அவர்கள் திடீரென வங்கி கணக்கில் ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் வந்ததை பார்த்து அதிர்ச்சியில் திளைத்தனர்.
யார் அனுப்பி இருப்பார்கள் என்று ஒவ்வொருவரிடம் போன் செய்து பேசினர். ஆனால், யாரும் பணம் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பணம் எப்படி வந்தது என்ற எண்ணமும் ஒவ்வொருவர் மனம் எண்ணங்களில் ஓடியது. இப்படி ஒவ்வொரு மகளிரும் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர், ‘இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் அடுத்த 2 மாசம் அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமை தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாசம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கேன்” என்று அதிரடியாக அறிவித்தார். அதன் பின்னரே இது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பணமா? என்று ஒவ்ெவாரும் மகிழ்ச்சியடைந்தனர். யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் இவ்வளவு பணத்தை வங்கியில் வரவு வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொருவரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்து நேரில் நன்றி செலுத்தினர். பெண்கள் வரவேற்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திகைத்து போனார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று காலையில் பெண்கள் கோலமிட்டு தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தினர். அந்த கோலத்தில் கலைஞர் உரிமை தொகை ரூ.5000 பெற்று கொண்டோம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி.
ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். மகளிர் உரிமை தொகை, கோடைக்கால சிறப்பு நிதி ரூ.5000 தந்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி” என்று வாசகம் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொருவரின் வீடுகளின் முன்பாகவும் இது போன்று கோலங்கள் வரையப்பட்டிருந்தது. இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
