வலங்கைமான் பிப். 14: வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நாவலவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம் நகர செயலாளர் சிவனேசன் ஆகியோர் 120 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பி.டி.ஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழா முடிவில் இடைநிலை உதவி தலைமை ஆசிரியர் ராஜரத்தினம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
