தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், சுமார் 38 தொகுதிகள் கடல் சார்ந்து காணப்படுகின்றன. இத்தொகுதிகளில் உள்ள சுமார் 12 லட்சம் மீனவர் வாக்குகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொகுதிகளில் கடலோர மீனவர்களின் ஓட்டுகள் ஒவ்ெவாரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக உள்ளது. தென்மாவட்டங்களில் குளச்சல், கன்னியாகுமரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மீனவர்கள் ஓட்டுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை பொறுத்தவரை கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீனவ கிராமங்களின் எண்ணிக்கை அதிகம். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை உவரி, இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, கூத்தங்குழி, தோமையார்புரம், பெருமணல், கூட்டப்புளி, கூடங்குளம், பெரியதாழை என கடலோர கிராமங்களின் எண்ணிக்கை நீண்டு செல்கிறது. ராதாபுரம் சட்டசபை தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வதில் கடலோர கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பெரியதாழை, மணப்பாடு, குலசேகரப்பட்டினம், ஆலந்தலை அமலிநகர், திருச்செந்தூர், வீரபாண்டிய பட்டணம், காயல்பட்டினம் கொம்புத்துறை, புன்னக்காயல், பழையகாயல், தூத்துக்குடி, தருவைக்குளம், வைப்பாறு என கடலோர கிராமங்களை கணக்கிடலாம். திருச்செந்தூர், தூத்துக்குடி சட்டசபை தொகுதிகளில் கடலோர கிராமங்களின் பங்களிப்பு அதிகமுள்ளது.
குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டு ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, கீழ மற்றும் மேல மணக்குடிகள், ராஜாக்கமங்கலம், புத்தன்துறை, பெரியகாடு, அழிக்கால், பிள்ளைதோப்பு, முட்டம், கடியப்பட்டினம், குளச்சல், நீரோடி என கடலோர கிராமங்கள் காணப்படுகின்றன. இதேபோல் ராமநாதபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளனர்.
கடலோர கிராமங்களில் மீனவர்களின் ஓட்டுக்கள் ஒரு காலத்தில் ‘மீனவ நண்பன்’ என அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் வருகையால் அதிமுக வசமே அதிகம் இருந்தன. காலப்போக்கில் அதிமுக வசமிருந்த மீனவ ஓட்டுகள் மெல்ல மெல்ல மற்ற கட்சிகளின் பக்கமும் சரியத் தொடங்கின. இதில் தீவிர களப்பணியாற்றிய திமுக மீனவ மக்களின் ஓட்டுகளை அமோகமாக அறுவடை செய்தது.
மீனவ கிராமங்களில் கடலோர மக்களின் ஓட்டுக்கள் சமீபகாலமாக பல்வேறு கட்சிகளுக்கு சிதறும் சூழலும் உருவாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் கூட நெல்லை தொகுதியில் திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜவும், நாம் தமிழர் கட்சியும் மீனவர்களின் ஓட்டுகளை அதிகம் பெற்றன. அதிமுக 4வது இடத்திற்கு மீனவ வாக்கு வங்கி அடிப்படையில் தள்ளப்பட்டது. தமிழக அரசியலில் புதிதாக உருப்பெற்றுள்ள தவெகவும் மீனவ கிராமங்களில் கணிசமாக ஓட்டுக்களை பெற்றிடும் வகையில் காய் நகர்த்தி வருகிறது.
தென்மாவட்ட மீனவ கிராமங்களில் முன்பு போல் இல்லாமல், இப்போது வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கு பிரியும் நிலை காணப்படுகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
ஒன்றிய பாஜ அரசு இவ்விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருப்பதால், மீனவ மக்கள் அதிக துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகளை அதிகரித்தல், கடல் சார் மீனவர்களின் பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. ஒன்றிய பாஜ அரசு ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியாக தந்த ‘கடல் தாமரை’ திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டது. இதனால் இந்த தேர்தலில் இலங்கை மீனவர் பிரச்னையை கண்டு கொள்ளாத பாஜ அரசுக்கு பதிலடி கொடுக்க மீனவ கிராமங்கள் தயாராகி வருகின்றன.
அதுவும் அதிமுக – பாஜவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் அதிமுகவிற்கு இயல்பாகவே கிடைக்கும் மீனவ கிராம வாக்குகள் கூட இந்த முறை திசை மாறும் சூழ்நிலை உள்ளது. இலங்கை மீனவர் பிரச்னையை, அரசியல் கட்சிகள் மீனவர்கள் பிரச்னையாக கருதாமல், வாக்கு வங்கியாக பார்ப்பதால், கடலோர மீனவர்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தென்மாவட்ட மீனவர்களின் வாக்குகள் பொதுவாக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே என்றில்லாமல், மீனவர் பாதுகாப்பு, இலங்கை கடற்படை கைது தடுப்பு மற்றும் வாழ்வாதார வாக்குறுதிகளை நம்பி, பல்வேறு கட்சிகளுக்கும் திசை திரும்பும் நிலையும் காணப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் மீனவ மக்களின் ஓட்டுகளை அறுவடை செய்திட, இப்போதே அனைத்து கட்சிகளும் அணி திரண்டு வருகின்றன.
