சென்னை: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின்மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 15ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதேபகுதியில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை இன்று பெய்யும் வாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.
நாளை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ம் வாய்ப்பும் உள்ளது. வட தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். இது தவிர, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
14ம் தேதியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 15ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 16ம் தேதி மேற்கண்ட இடங்களிலும் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். குறிப்பாக வட மாவட்டங்களில் 17ம் தேதி வரையில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும்.
