சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் என்டிஏ கூட்டணிக்கு “ஜீரோ”வை திருப்பியளிப்போம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான புகைப்படத்தை பகிர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைத்தளம் பதிவு:
பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?. தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் என்டிஏ கூட்டணிக்கு “ஜீரோ”வைத் திருப்பியளிப்போம். தமிழ்நாடு-என்டிஏ எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு வெல்லட்டும், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
