சென்னை: வரும் 15ம் தேதி 12 கோயில்கள் சார்பில் இந்தாண்டு மகாசிவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை தொன்மை வாய்ந்த கோயில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு,
திருக்கோயில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினை தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.
2025-26ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, “9 கோயில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்தாண்டு கூடுதலாக, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீசுவரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோயில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோயில்கள் சார்பில் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் 16ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
