கோவையில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் நிறைய பேர் வந்து சேர்வார்கள். கொஞ்சம் பொருத்திருங்கள். அது யார், யார் என்பது அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பின்பு தெரியும். தமிழ்நாடு, கேரளா போன்ற 4, 5 மாநிலங்களை தவிர எல்லா மாநிலத்திலும் பாஜ ஆட்சி தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள், வந்தே பாரத் ரயில்களை கொண்டு வந்தார்.
அவற்றை அப்போது பியூஷ் கோயலை கேட்டா கொண்டு வந்தார்? எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டுகள் அருமையான ஆட்சி தந்தார். அதனால் மீண்டும் அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என பாஜ விரும்புகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 1 மாதத்தில் ஆரம்பித்து விடும். தொகுதி பங்கீட்டை முடிக்க 2 மணி நேரம் போதும். நான் கோவைக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. எல்லா பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். நான் கோவையில் போட்டியிடவில்லை.
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு எதிரான மனநிலையில் தான் பேசி வருகிறார். தவெக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்ற தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து சரியானது. எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் சொல்வதில் தவறில்லை. தவெக வேட்பாளர்களை அறிவிக்கட்டும். தேர்தல் வரட்டும். பிறகு அவர்கள் குறித்து பேசலாம். பீகாரில் எங்கள் கூட்டணி கட்சி ஆட்சி தான் நடக்கிறது. நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். அதேபோல தமிழகத்திலும் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
* அண்ணாமலை-நயினார் மோதல்
அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ‘‘சிறிய விஷயங்களை ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குகின்றன. நாங்கள் அண்ணன், தம்பியாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை’’ என நயினார் பதிலளித்தார்.
