×

தமாகாவுக்கு வேலை செய்ய மாட்டோம் அதிமுக மாஜி எம்எல்ஏ ஆடியோ வைரல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக யுவராஜா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணி வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். திருமகன் ஈவெரா மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசும் போட்டியிட்டனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இளங்கோவன் மறைவுக்கு பின்னர் 2வது முறையாக நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றார். 5 ஆண்டில் 3 முறை தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தயாராக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள தமாகா மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதேநேரத்தில் அதிமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க கூடாது. அப்படி ஒதுக்கினால் கூட்டணி கட்சிக்காக அதிமுகவினர் வேலை செய்ய மாட்டோம் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு பேசிய ஆடியோ வைரல் ஆகியுள்ளது. அந்த ஆடியோவில், ‘‘ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் யுவராஜாவுக்கு ஒதுக்கினால், ஜெயிப்பது மிகவும் கடினம்.

வாய்ப்பு ரொம்ப குறைவு. அதிமுகவினர் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிமுகவினர் வேலை செய்ய மாட்டார்கள். அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் தான் சரியாக வரும். நான் தான் வேட்பாளராக வேண்டும் என நினைக்கவில்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து, அதிமுகவில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், கட்சியினர் வேலை செய்வார்கள்.

இல்லையென்றால் வேலை செய்ய மாட்டாங்க. தமாகா கூட்டணி கட்சி தான் தலைமை அறிவுறுத்தினால், அதற்காக பெயரளவில் வேலை செய்வாங்க. கூட்டணி கட்சியினருடன் போவாங்க, வருவாங்க. ஆனால், ஜெயிக்க வைக்க மாட்டாங்க. கடந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டபோது கூட, எனது வெற்றிக்காக வேலை செய்வது போல நடிச்சாங்க. ஆனால், வேலை செய்யவில்லை. அதுபோல தான். இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது.

Tags : Tamaaga ,AIADMK ,MLA ,2021 assembly ,Erode East constituency ,Thirumagan Evera ,Congress ,DMK ,Yuvaraja ,Maanya Congress ,
× RELATED மடப்புரம் காவலாளி வழக்கில் கூடுதல்...