நீங்க என்ன வேணாம்னு சொல்றது… உங்களுக்கு எங்க ஆதரவு இல்ல…சின்ன மம்மி vs குடிகாரர்கள் சங்கம்

தமிழக தேர்தல் களம் கூட்டணி பேச்சுவார்த்தைகளால் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ளது. இதேபோல் கட்சிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் சிலர் வெளியிடும் அறிவிப்புகளும் தொடர்கிறது. ஆனால் ஒரு அமைப்பு கொடுத்த ஆதரவை ஏற்கமாட்டோம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மறுத்துள்ளதும், இதுதொடர்பான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் என்ற அமைப்பை நடத்துபவர் சென்னை கொரட்டூரை சேர்ந்த செல்லப்பாண்டியன். இவர் ஏற்கனவே மது அருந்துவோருக்கு தேவையான வசதிகள் என்ற பெயரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகைப்பூட்டி வருகிறார். குறிப்பாக மதுஅருந்துவோருக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய பாரடைஸ், ஓய்வூதியம், உயர்மருத்துவ பரிசோதனை போன்ற பல்வேறு கோரிக்கைகள் விவாதத்திற்கு உள்ளானது.

இந்த வகையில் அவர் சசிகலாவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் எழுதி, அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது பரபரப்பான தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சின்னம்மா அணிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுகிறது சங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தேர்தலில் சின்னம்மாவுக்கு சங்கம் ஆதரவு தர இருந்தோம். ஆனால் சின்னம்மா அணியிலிருந்து உங்கள் சங்கத்தின் ஆதரவு தேவையில்லை என்று வெளிப்படையாக சொல்லி விட்டதால் சங்கம் ஆதரவை வாபஸ் பெறுகிறது.

இவண் பி.செல்லப்பாண்டியன்’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஒரு சிறியகட்சியோ, சங்கமோ ஆதரவு கொடுத்தால் எந்தஒரு கட்சியோ, அணியோ வெளிப்படையாகவே நிராகரிக்காது. ஆனால் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொண்டு வரும் சின்னமம்மி அணியினர் இப்படி செஞ்சிங்டாங்களே என்று சில மதுபிரியர்கள் கலக்கத்துடன் கமென்ட் போட்டு வருவது தனிக்கதை.

Related Stories: