விபத்துக்குப் பிறகு முதல் சில மணி நேரங்களில் உரிய சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம். இதைதான் மருத்துவ உலகில் ‘கோல்டன் பீரியட்’ அல்லது ‘Golden ஹவர்’ என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் பல சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் பணப் பற்றாக்குறை, மருத்துவமனை அணுகல் இன்மை போன்ற காரணங்களால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்கவே ‘‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’’ என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது.
சொன்னாரு: 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘சுகாதாரம்’ மற்றும் ‘மருத்துவம்’ ஆகிய பிரிவுகளின் கீழ், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் ‘‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’’ என்ற திட்டம் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
செஞ்சாரு: முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் இத்திட்டத்தை டிசம்பர் 18, 2021ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 250 மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகள் தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் சிக்கினால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, உள் ரத்தப்போக்கு, எலும்பு முறிவு, உறுப்புகள் பாதிப்பு போன்றவற்றிற்கான அவசர அறுவை சிகிச்சைகள், ரத்தம் மாற்றம் மற்றும் இரத்தக் குழாய் சிகிச்சை, மூச்சுத்திணறல் சிகிச்சை, தீவிர சிகிச்சை (ஐசியூ), எலும்பு முறிவு நிலைப்படுத்தல், தலையில் ஏற்படும் காயங்களுக்கு அவசர சிகிச்சை, முதுகெலும்பு பாதிப்பு சிகிச்சை. உள் உறுப்பு காயங்களுக்கான அவசர நடவடிக்கைகள், ஷாக் மேலாண்மை, பெருந்தமனை பாதிப்பு சிகிச்சை உள்ளிட்ட 81 அவசர சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இந்த அனைத்து சிகிச்சை முறைகளும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உடன் இணைக்கப்பட்டடுள்ளது. ஆரம்பத்தில் ரூ.1 லட்சம் வரை சிகிச்சை செலவு ஏற்கப்பட்டது. 2024 டிசம்பரில் இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. அத்துடன், விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்போருக்கும் ரூ.5000 வழங்கப்படுகிறது.
ஒரு உயிரை காப்பாற்ற உதவியதற்கான ஊக்கத்தொகை என்றே சொல்லலாம். இது மேலும் பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது. சாலை போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் மரண விகிதத்தை 50 சதவீதம் குறைக்கும் நோக்கம் கொண்ட இத்திட்டம், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது. ஒன்றியஅரசு இதைப் போன்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
* 4 லட்சம் பேர் பயன்: 300 கோடி ரூபாய் செலவு
ஆண்டு பயன்பெற்றவர்கள்
2021 (டிசம்பர் மட்டும்) 5,000 பேர்
2022 1,20,000 பேர்
2023 75,000 பேர்
2024 1,20,000 பேர்
2025 (ஜூலை வரை) 80,000 பேர்
* இந்த திட்டம் தொடங்கி 2025 ஜூலை வரை 4 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதற்காக ரூ.300 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டுள்ளது.
