பொய்யர்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வழக்கு போடுது… அரசியலில் இருந்து என்னை ஒழிச்சு கட்ட சதி நடக்குது..! அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்கும், மாம்பழ சின்னத்துக்கும் உரிமை கேட்ட ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போதைய ஆவணங்களின் படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தெரிவித்து விட்டது. இதனால், பாமக மற்றும் சின்னம் விவகாரத்தில் அன்புமணி கையே ஓங்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், தேர்தல் அன்புமணி ஆதரவாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டு, ‘அய்யா பாமக’ என்ற கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் முடிவு செய்து உள்ளார். இந்த கட்சியை உடனே பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியும் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலில் இருந்து என்னை ஒழித்துக் கட்ட எதை எதையோ பேசுகின்றனர். ஒரு கூட்டம் (அன்புமணி) பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது.

இரண்டாவது முறையாக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். நீதிபதியே அசந்துவிட்டார். இது தேர்தல் ஆணையம் போடவேண்டிய வழக்கு அல்ல, என்று முகத்தில் கரி பூசுவதுபோல அனுப்பிவிட்டனர். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர், குழப்புகின்றனர். அரசியலில் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எங்களுக்கும் தெரியாமல் அந்த பொய்யர்கள் கூட்டத்துக்கு சார்பாக ஒரு வழக்கை தேவையில்லாமல் போடுகிறது.

இதுவரை நடந்திருந்திராத ஒரு அதிசயம். கேவலமான இந்த செயலை தேர்தல் ஆணையமே செய்திருக்கிறது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் போகவில்லை. அது திரும்ப திரும்ப தவறு செய்கிறது. வேறு யாரையும் நான் குறைசொல்ல விரும்பவில்லை. அதனால் ஊடகங்கள் சரியான தகவலை, உண்மையை சொல்ல வேண்டும். கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதன் முடிவில் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் அய்யா பாமக எனும் கட்சி உருவாகி இருப்பதாக கூறுகிறார்களா? என்ற கேள்விக்கு, ‘‘நான் அதை பார்க்கவே இல்லையே… என் பெயரை வைத்து யாராவது ஆரம்பித்து இருக்கலாம். அது பற்றி எனக்கு தெரியாது. இதுகுறித்து அடுத்த வியாழனன்று பதிலளிக்கிறேன்’’ என்றார்.

* நான் துரோகியா? அன்புமணிக்கு ஜி.கே.மணி பதிலடி
தைலாபுரத்தில் பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி கூறுகையில், ‘‘ராமதாஸ் தான் எங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு. ஆனால் அவரிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் ஜிகே மணி துரோகி, பொய் சொல்கிறார் என கூறுகிறார்கள். ராமதாஸ் சக்திவாய்ந்த ஒரு தலைவர். அவரை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு இப்படி கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் காலையில் எழுந்ததும் நல்லதை நினைத்து தியானிப்பேன்.

யாருக்கும் கெடுதல் செய்யாத என்னைப் பார்த்து துரோகி என்று சொன்னால் எப்படி?. ராமதாசுக்கு துரோகம் செய்திருந்தால் அவரிடம் யாரும் இருக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கை போட்டது ராமதாஸ். ஆனால் இரு தரப்பும் வந்து வாதாடினர்.

யாரும் பாமகவில் தலைவர் இல்லை என நீதிமன்றமே தீர்ப்பளித்தபின் எங்களது செயற்குழு, பொதுக்குழு கூடி ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்தது. அப்படியிருக்க மீண்டும் சீராய்வு மனு போடலாமா?, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது. ஜனநாயக மாண்பை கட்டிக் காக்க வேண்டும். இதுபோன்ற அநீதி இனி எந்த கட்சிக்கும் ஏற்படக் கூடாது’ என்றார்.

Related Stories: