ஓல்டு பார்முலாவுடன் ஓபிஎஸ் புது கணக்கு..! வெள்ளித்திரை கனவு வெற்றி தருமா?

1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய ஓ.பன்னீர்செல்வம், 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். டிடிவி.தினகரனுடனான நட்பால் டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தபோது, முதலமைச்சர் பதவியை பெற்றார். இதனைத்தொடர்ந்து, 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பு நடந்தபிறகு, 2011ம் ஆண்டு முதல் பெரியகுளம் தொகுதி தனி தொகுதியானதால், ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் 2011, 2016, 2021ம்ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதுவரை சிட்டிங் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு சார்பில், கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பலாப்பழம் சின்னத்தில் பாஜ மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அரசியலில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தார். தற்போது அதிமுக மற்றும் பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்து விட்ட நிலையில், தன்னையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள ஓபிஎஸ் கெஞ்சி வருகிறார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, கட்சியில் எந்த வடிவிலும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை பொதுக்குழுவை காரணம் காட்டி மறுத்து வருகிறார். அதிமுக-பாஜ கூட்டணியில் தன்னை எப்படியாவது சேர்த்துக் கொள்ள பாஜவின் அண்ணாமலை, டிடிவி.தினகரன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக பாஜ தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் தேதி அறிவித்து, கூட்டணி முடிவாகி அந்தந்த கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை ஏற்பட்டால் யாரிடம் கூட்டணி சேருவது, கூட்டணிக்கு சாத்தியமில்லாமல் போனால் தனது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமே என்ற பரிதவிப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்க்காவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும்தான் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கணித்து வருகின்றனர். இதில், அடிக்கடி ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவரை நேரில் சந்திப்பது, திமுக நிர்வாகிகளுடன் நட்பு பாராட்டுவதன் மூலம் நேரடியாக திமுகவில் இணைந்து தேர்தல் களம் காணுவது, இல்லையெனில் இவர் நடத்தி வரும் தொண்டர் உரிமை மீட்பு கழகத்தை திமுகவுடன் கூட்டணியாக சேர்த்து போட்டியிடுவது என்பதாக உள்ளது. அதே சமயம், தனது இருப்பை காட்டிக்கொள்ள நடிகர் விஜய் கட்சியில் சேருமாறு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வற்புறுத்தி வருகிறாராம். முதல் அமைச்சராக இருந்துவிட்டு, நேற்று அரசியலுக்கு வந்த நடிகரை தலைவர் எனச் சொல்லி விஜய்க்கு பின்னால் நிற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு தன்மானம் இடம் தரவில்லையாம்.

ஆனாலும், அதிமுக-பாஜ கூட்டணியில் இடம் கிடைக்கவில்லையென்றால், வேறு வழியின்றி செங்கோட்டையன் மூலமாக நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தை கூட்டணியில் இணைப்பது என முடிவு செய்துள்ளாராம். தவெகவுடன் சேர்ந்து போட்டியிடுவது எனவும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச்செய்யவிடாமல் தடுப்பது என முடிவு செய்துள்ளாராம். இதன்படி, நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியுடன் கூட்டணி அமைத்தால், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து போட்டியிடும் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக போட்டியிடுவது என முடிவு செய்துள்ளாராம். இன்றுவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ள வெல்லமண்டி நடராஜன் மற்றும் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோருக்கு விஜய் தலைமையிலான கூட்டணியில் சீட்டு பெற்று போட்டியிடுவது என முடிவு செய்துள்ளாராம்.

அதேசமயம், மூத்த மகன் எம்பியாக இருந்ததால், அவரை டெல்லி அரசியலுக்கு விட்டு விடலாம். இளைய மகன் ஜெயபிரதீப்பை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளாராம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அனுபவத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதியாக பார்த்து அங்கே ஜெயபிரதீப்பை போட்டியிட வைப்பது என முடிவு செய்துள்ளார். 1996ம் ஆண்டில் நடந்த பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பு அலை கடுமையாக இருந்ததால், ஜெயலலிதா பெயரை சொல்லி பிரசாரம் செய்யாமல் ஓட்டு கேட்டார். பெரியகுளம் நகரில் உள்ள ரஜினி ரசிகர்கள் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு கேட்கும் வகையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஜெயலலிதா பெயரை பெரிதாக உச்சரிக்காமல், ரஜினிகாந்த் படபோஸ்டர்களுடன் வலம் வந்த ரஜினி ரசிகர் பட்டாளத்துடன் சென்று வாக்கு சேகரித்தார். அந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஆனால் ரஜினி ரசிகர்கள் ஆதரவுடன் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வெற்றி பாதை துவங்கியது. 1996ல் ஜெயலலிதா பெயரைச் சொன்னாலே வெற்றி கிட்டாது என்ற நிலை இருந்தது போல, தற்போது, அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்ற நிலையில், தனக்கான அரசியல் தேர்தல் வெற்றியை பெற 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2.0 போல மீண்டும் உச்சநடிகராக உள்ள நடிகர் விஜய் நடத்தி வரும் தவெக கட்சியுடன் கூட்டணி அமைப்பது மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பெறலாம் என ஓ.பன்னீர்செல்வம் கணக்கு போட்டு வருகிறார்.

* மோடியிடம் தமாகா அடகு: தேமுதிகவை கூறுபோட்டு விற்கும் பிரேமலதா; நாஞ்சில் சம்பத் சரவெடி
நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ‘இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்து விட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுகவை அவரது மனைவி பிரேமலதா கூறு போட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம், வாங்கத் தான் ஆளில்லை. அதிமுகவுக்கு மாற்றான தவெக இஸ்லாமியர்களை பாதுகாக்கும் கட்சியாகும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் சிறைவாசிகளை விடுவித்தால் பாஜ எதிர்வினையாற்றும் என்ற பயத்தில் இருந்தது.

அது இப்போதும் தொடர்கிறது. முஸ்லிம்கள் மனது புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என பாஜ அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தது. முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தையும் கொண்டு வந்தது. அத்தகைய பாஜவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். மாட்டிறைச்சியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதே பாஜவினர்தான். நான் என்ன சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். டில்லியில் இருந்து கொண்டு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. தமிழ் தேசியம் என பேசும் சீமான் எல்லோரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். தவெகவுக்கு கூடும் கூட்டத்தின் ஒரு பங்கு கூட்டம் கூட அதிமுகவுக்கு கூடாது’’ என்றார்.

Related Stories: