சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாகவுள்ள 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்தாண்டு டிச. 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தேர்வு மையங்களில் வெளிப்படையாகவே செல்போன் பயன்படுத்தவும், காப்பியடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டன. இவையெல்லாம் தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. எனவே, நேர்மையாக நடைபெறாத இந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தாக்கல் செய்யபட்ட பதில்மனுவில், ‘‘விதிகளின்படி மாநிலம் முழுவதும் தேர்வு சுமூகமாக நடத்தப்பட்டது. அனைத்து சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு மையத்திற்குள் முறைகேட்டில் (மொபைல்) ஈடுபட்ட 4 நான்கு தேர்வர்கள் மற்றும் இரண்டு கண்காணிப்பாளர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்தது. அதன்படி, கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்கு தேர்வர்களையும் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க தடை விதிப்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வேறு எந்த தேர்வுக் கூடத்திலும் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என தெரிய வந்தது. தேர்வு வெளிப்படையாகவும் நடத்தப்பட்டது. தேர்வு மையங்கள் துணை கலெக்டர் பிரிவு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது’’ என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை பணி நியமன ஆணை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: