வாகன நிறுத்தம் அறிவிக்க தஞ்சாவூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு எல்லைக்கோடு

*100, 200 மீட்டரில் வரையப்பட்டது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளதை முன்னிட்டு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கான எல்லைக்கோடு வரையும் பணி நடந்தது.தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம்தேதி(இன்று) தொடங்கி, ஏப்ரல் 6ம்தேதி வரை நடைபெறும்.

அதன் பின்னர் வேட்பு மனு ஏப்ரல் 7ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். ஏப்ரல் 23ம்தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், கடந்த 15ம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டியிட விருப்ப மனு, வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பல்வேறு தேர்தலுக்கான நகர்வுகளை செய்து வருகிறது.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஏப்ரல் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இதில் பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வரும் 31ம்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 1, 3 மற்றும் 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. எனவே வேட்பு மனு தாக்கல் 30ம்தேதி(இன்று), அடுத்த மாதம் 2, 4 மற்றும் 6 தேதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதன் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே கால அவகாசத்தை தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது குறிப்பித்தக்கது.

வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான அலுவலகங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் வாகனங்கள், வேட்பாளர்களுடன் வருபவர் குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்படுவார்கள்.

இதற்காக வேட்புமனு தாக்கல் நடைபெறும் அலுவலகங்கள் முன்பு எல்லைக்கோடு வரையப்படும். அதன்படி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகம் முன்பும் எல்லைக்கோடு வரையும் பணி நேற்று நடைபெற்றது. அலுவலத்தில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இதனை வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: