தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம்தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் தவெகவில் நேர்காணல் நடத்தாமல் வேண்டியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்று வேட்பாளர்கள் அறிவிப்பு நடந்த மண்டபத்தின் முன்பே அக்கட்சியினர் போராட்டமும் நடந்தது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பரணி பாலாஜிக்கு திருக்கோவிலூர் தொகுதியும், மீதமுள்ள 3 தொகுதிகளில் ரிஷிவந்தியத்தில் தியாகதுருகம் அசோக்குமார், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அருள் விக்னேஷ், சங்கராபுரத்தில் ஜெகதீச பாண்டியன் என 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 3 வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட செயலாளரான பரணி பாலாஜிக்கு தலா ஒரு கோடி பணம் கொடுத்ததாக கட்சி வட்டாரங்களில் பரவலாக தற்போது பேசப்படுகிறது. ஊழலை ஒழிப்பேன்… தமிழகத்தை மீட்போம்… என தவெக தலைவர் விஜய் மேடைகளில் பேசி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட, பணம் கொடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருப்பதாக தவெகவினரே குமுற, இப்படிப்பட்டவர்களால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்ற கேள்வியையும் பொதுமக்கள் களத்தில் எழுப்பி வருகின்றனர். மாவட்டமே இப்படி செய்யலாமா? என தொண்டர்கள் முணுமுணுக்க, வேட்பாளர்கள் மூவருமே வெவ்வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், மக்களிடம் செல்வாக்கு கிடைக்காது என்பதை யாரிடம் சென்று முறையிடுவதென தெரியாமல் சொந்த கட்சியினரே புலம்பி வருகிறார்களாம்.
