சென்னை: சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது. இந்தத் துயர்மிகு வேளையில் சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவரது கரம்பற்றிக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
பிரபல தென்னிந்திய நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் (86) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் 29 மார்ச் 2026 அன்று காலமானார்.இறுதிச் சடங்குகள் பெங்களூரில் நடைபெற்றன. பிரகாஷ் ராஜ் தனது தாயாரின் உடல்நலன் குறித்து முன்பு பலமுறை பேசியுள்ளார்.
குறிப்பாக மூளையில் ஏற்பட்ட கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். சுவர்ணலதா தனது கடினமான சூழ்நிலைகளைத் தாங்கி, பிரகாஷ் ராஜை ஒரு வலுவான ஆளுமையாக வளர்த்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ராஜின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என்றும் சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துகொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
