பட்டா வழங்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

மதுரை, பிப். 4: மதுரை பீபீகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை பட்டா கேட்டு முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பீபிகுளம் முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் பாண்டியராஜ் முன்னிலையில் 250க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெரியாறு-வைகை வடிநில கோட்டம், பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுகுமாறனிடம் மனு அளித்தனர்.அதில், ``பீபீகுளம் முல்லைநகர், ராணுவ குடியிருப்பு, ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகிறோம். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மாநகராட்சி மறுத்து விட்டது. 1986ல் குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளாக மாற்றப்பட்டன. மத்திய-மாநில அரசு நிதியுதவியுடன், கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டு, நீண்டகாலமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கண்மாயை ஆக்கிரமித்து, நீர்நிலைகளை அழிப்பதாக 2016ல் ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண் உள்ள அனைத்து வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை. எனவே, உரிய பரிசீலனை செய்து, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: