குன்றத்தூர்: பெரிய புராணத்தை இயற்றிய தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் அவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும், இக்கோயிலுக்கு ஏராளமானோர் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்aறனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் சீரமைக்கும் பணி மற்றும் கோயில் வளாகத்திலேயே சொற்பொழிவு மண்டபம், பசுக்கள் காப்பகம் ஆகியவை கட்டும் பணிகள் யாவும் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இப்பணிகள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக, கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து ல சிதம்பர நாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் திருவையாறு கட்டளை சொக்கலிங்க தம்பிரான் தருமை ஆதீனம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் கும்பாபிஷேக விழாவை செய்து வைத்தனர். யாக சாலையில் இருந்து கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கருவறை மீது அமைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது இருந்த கலசத்தின் மீது கைலாய வாத்தியங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், புனித நீரானது கோயில் வளாகம் முழுவதும் சுற்றி இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது. குன்றத்தூர் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நித்தியராமன் செய்திருந்தார். விழாவில் கோயில் அறங்காவலர் பத்மினி கன்னப்பன், குன்றத்தூர் நகர்மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் கன்யா, நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
