அகமதாபாத்: உலகக் கோப்பை டி20 தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த விறுவிறுப்பான போட்டியில் 2வது சூப்பர் ஓவரில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி வாகை சூடியது. உலகக் கோப்பை டி20 13வது போட்டி, அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர் கேப்டன் அய்டன் மார்க்ரம் 5 ரன்னில் வீழ்ந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் குவின்டன் டிகாக், பின் வந்த ரையான் ரிக்கெல்டன் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த இணை, 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்த நிலையில், 59 ரன்னில் (41 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி) டிகாக் ஆட்டமிழந்தார். சில நிமிடங்களில் ரையான் 61 ரன்களில் (28 பந்து, 4 சிக்சர், 5 பவுண்டரி) வீழ்ந்தார். 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்தது. பின்னர், 188 ரன் இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அதன் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், தெ. ஆ. பந்துகளை தெறிக்க விட்டு ரன்களை குவித்தார். 42 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரிகள் விளாசிய அவர் 84 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 19.4 ஓவரில் 187 ரன்னுக்கு ஆப்கானிஸ்தான் ஆட்டமிழந்தது. இரு அணிகளின் ஸ்கோர் டை ஆனதால், சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 16 ரன்களும், குர்பாஸ் 1 ரன்னும் எடுத்தனர்.
அதையடுத்து, 18 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் டேவிட் மில்லர் 1, டெவால்ட் புரூவிஸ் 6, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்கள் எடுத்தனர். சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7, டேவிட் மில்லர் 16 ரன்கள் விளாசினர். அதையடுத்து, 24 ரன் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது நபி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், 3, 4, 5வது பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர் விளாசி 3 சிக்சர் விளாசி 18 ரன் சேர்த்தார். உதிரியாக கிடைத்த ஒரு ரன்னையும் சேர்த்து ஆப்கனால், 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதனால், 4 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி பெற்று அசத்தியது.
