ஆப்கனுடன் முதல் டெஸ்ட் ராகுல், கில் அசத்தலான சதம்: 368 ரன்கள் குவித்தது இந்தியா

நியூ சண்டிகர்: ராகுல், கில் அசத்தல் சதம் கைகொடுக்க, ஆப்கானிஸ்தானுடன் நடக்கும் முதல் டெஸ்ட், முதல் நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் குவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி நியூ சண்டிகர் மகாராஜா யாதவேந்திராசிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ய ஓபனர்களாக ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் இறங்கினர். ஸ்கோர் 41 ஆக இருந்தபாது ஜெய்ஸ்வால் 24 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய சுதர்சன், கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 81 ரன் (104 பந்து, 13 போர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், கே.எல்.ராகுலுடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்கோர் 247 ரன்னாக இருந்தபோது கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார் (100 ரன், 165 பந்து 11 போர்). தொடர்ந்து அடுத்த பந்திலே அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மறுபுறம் நிலைத்து ஆடி வந்த கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்த, ரிஷப் பண்ட்டும் அரை சதமடித்தார். கில் 103 ரன்னிலும், ரிஷப் பண்ட் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்தது.

Related Stories: