ககாமிகஹாரா: யு-18 ஆண்கள் ஆசியக் கோப்பை ஆக்கி 2026 தொடரின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியின் 12-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதை இந்திய வீரர் ஆஷிஷ் கோலாக மாற்றி 1-0 என்ற கணக்கில் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது கால்பகுதியின் 27-வது நிமிடத்தில் பாகிஸ்தான் கோல் அடித்து 1-1 என சமநிலையை எட்டியது. 35-வது நிமிடத்தில் ஷாருக் அலி அடித்த கோல் மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
37-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முஹம்மது பர்ஹான் அஸ்லம் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். 42-வது நிமிடத்தில் உசைர் அகமது குரேஷி பெனால்டி கார்னரை கோலாக மாற்ற, பாகிஸ்தான் 3-2 என போட்டியில் முன்னிலை பெற்றது. கடைசி கால்பகுதியின் 49-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஆஷிஷ் கோலாக மாற்றி 3-3 என சமநிலையை ஏற்படுத்தினார்.
53-வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய ஆஷிஷ் தனது ஹாட்ரிக் கோலை பூர்த்தி செய்ததுடன் இந்தியாவை 4-3 என்றமுன்னிலைக்கு கொண்டு சென்றார். 56-வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்து ஆஷிஷ் போட்டியில் தனது 4-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், தொடரை நடத்தும் அணியுமான ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது.
