கே.எல்.ராகுல் ஆலோசனை உதவியாக இருந்தது: சாய்சுதர்சன் பேட்டி

நியூ சண்டிகர்: இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ய இந்தியா முதல் நாளில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால்24 ரன்னில் வெளியேற கே.எல்.ராகுல் 100, சாய்சுதர்சன் 81 ரன் எடுத்து அவுட் ஆகினர். டெஸ்ட்டில் 12வது சதம் விளாசிய கேப்டன் சுப்மன் கில் 103, ரிஷப் பன்ட் 50 ரன்னுடன் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் சாய்சுதர்சன் அளித்த பேட்டி: “பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் தன்னை ஆதரித்து, பக்கபலமாக இருந்து, நாட்டிற்காக சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பும்போது, அது மனதளவில் மிகுந்த சுதந்திரத்தையும் உறுதியையும் அளிக்கிறது. அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் அதிகரிக்கிறது. முதலாவதாக, இந்திய அணிக்காக ஆடுவது ஒரு மிகப்பெரிய கௌரவம். நான் அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா? அல்லது அது போன்ற எண்ணங்களைப் பற்றிச் சிந்திப்பதை விட, உங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும், உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யவும் இது மிகுந்த சுதந்திரத்தை அளிக்கிறது. அணியிடமிருந்து உங்களுக்கு மிகுந்த சுதந்திரம் கிடைப்பதால், அந்த எண்ணம் ஒருபோதும் எழுவதில்லை. இது ஒரு மகிழ்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

கே.எல். ராகுலுடன் இணைந்து ஆடும் போது மிகுந்த அமைதியையும் உறுதியையும் தருகிறார். அவரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட முறையில், மனதளவில், ஒரு பேட்ஸ்மேனாக எனது திறமைகளையும், என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும், அதன் மீது நம்பிக்கை வைப்பதுமே எனக்கு முக்கியமாக இருந்தது. ஆடுகளத்தை பார்க்கும்போது வரும் நாட்களில் சுழலுக்கு சாதகமாக மாறும் என தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: